Wednesday, August 12, 2015

வாழ்க்கை போராட்டம்

                  பெயருக்கேற்றார் போல் எங்கு காணினும் பச்சை பசேலென நிலம் , நீர்,மாடு, ஆடு, கோழி என பண்ணையம் பார்த்த ஊர்தான் பண்ணைகுப்பம். இப்பொழுது இயற்கை சூழல் மெல்ல மறைந்து வரும்பகுதியாக மாறிப்போனது. அது கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் வளர்ந்து  வரும்  நகரத்தின் அருகே உள்ளதால் அளவுக்கதிகமான வாகனங்களின் பேரிறைச்சலும், மாசு படிந்த காற்றும்,  அதிகரித்து கொண்டே போனது. அந்த ஊரில் பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து  வந்தார்கள். கிராமம் என்பது போய் மெல்ல மாறி வரும் பகுதியாகையால் அக்கம்பக்கத்தில் பேசி பழகிய மக்கள் ஒருவரை ஒருவர் அறியாது வாழ்க்கையின் ஓட்டத்தில் மாறி போயிருந்தார்கள்.
                        அப்படி இருந்தும் பொன்னம்மாள் அந்த பகுதிக்கே பரிச்சயம். யார் இந்த பொன்னம்மாள் ? வசைதி  படைத்த மிராசு குடும்பத்தை சேர்ந்தவளா, இல்லை   அதிகாரமிக்க பெரிய பதவியில் உள்ளவளா, என நினைக்க தோணும். மாநிறமும் அல்லாது கரிய நிறத்தில் படர்ந்த முகம், சற்றே நரைத்த முடியில் முடிந்த கொண்டை, ஈறுக்குச்சி செருகிய மூக்கு காது,  நெற்றியில் சந்தனபொட்டு, வற்றலாய்  வற்றி போன தேகத்தில் வெளுத்த நிறத்தில் சுற்றிய சேலை இதுவே அவளின் அடையாளம்.  தலையில் கூடை சுமந்த படி  "காய்கறி வாங்கலையோ காய்கறி" கணீர் குரலில் கூவிய படியே அந்த பகுதி முழுவதும்  நாளும் நடந்தே தீர்த்திடுவாள்.
                    இந்தாம்மா  காய்கறி என்று கூப்பிடும் குரலுக்கு ஓடிபோய் அண்ணே, அக்கா,அத்தாச்சி என உறவு சொல்லி காய்கறியோடு அன்பையும் பரிமாறுவதால் அவளிடம் காய் வாங்குவோர் அநேகம் பேர். அப்படிதான் ஒருமுறை அந்த பகுதியில் குடிவந்திருந்த இளம்  வயது பெண்ணொருத்தி இவளிடம் காய் வாங்கிக்கொண்டிருந்தால். அந்த பெண் இவளிடம் பப்பாளி என்ன விலை மா எனக்கும் ஒன்னு குடு என்று கேட்க. பெண்ணின் வயதை கணக்கில் கொண்டு ஏங்கண்ணு உண்டாயிருகியா என கேட்டாள். அந்த பெண்  பேந்த பேந்த முழித்தபடியே நாம் காய் கேட்டால் இந்த கிழவி இப்படி கேட்கிறாளே என்று எண்ணியவாறே ஆமாம் என்று சொல்ல. இவள் திடுக்கிட்டவளாய்   உண்டாயிருக்கும்போது பப்பாளி சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்னு பெரியவங்க சொல்லுவாங்க தாயி. இந்த மாறி நேரத்துல நீதான் பாத்து  நடந்துக்கணும் சொல்லி முடிக்கும் முன்பே அந்த பெண் கலங்கி போனாள். அதை கண்ட பொன்னம்மாளும் கடந்த காலத்தில் மூழ்கியபடியே இவளது கண்களும் குளமாயின.  அதற்க்கு மேல் அன்று அவளால் வியாபாரத்தின் மேல் சிந்தனை செலுத்த முடியவில்லை.
பொன்னம்மாளுக்கு மணமாகி இந்நாள் வரை அவளது வயிற்றில் ஒரு புழு பூச்சு உண்டாகவில்லை, அவள் வேண்டாத தெய்வம் இல்லை, பார்க்காத வைத்தியம் இல்லை, இருந்தும் அந்த சொக்கநாதன் கண் திறக்கவே இல்லை. அதை நினைத்து அழுத படியே தூங்கிபோனாள். இதுபோலவே அழுவதும் எழுவதும்நாளும் கூடை சுமப்பதும் வாடிக்கையாகி போனது.
                  ஒருநாள் தலையில் கூடை  சுமந்த படி தெருவில் போய் கொண்டிருந்தபோது சற்று தொலைவில் நைந்து போய், லுங்கி சட்டைஅணிந்து  வழுக்கை தலையோடு வரும் உருவம் சூரி என்பதை யூகித்தது தான் தாமதம், அவளின் கண்கள் சிவப்பேறி, இருட்டிக்கொண்டு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
அவளுக்கு தலைசுற்றி இளமை கால நினைவுகளில் மூழ்கி போனாள். பொன்னம்மாள் பள்ளியில் படிக்கும் காலத்தில் படு சுட்டி. அவளோடு படிக்கும் சகமாணவன் முனியன். அவன் படிப்பில் நாட்டம் செலுத்த மாட்டான், சகநன்பர்களோடு கூடி கும்மாளமிடுவதும், ஊர் சுற்றுவதும், துடுக்காக இருப்பதும், நகைசுவையாக பேசி மகிழ்வதும், விளையாட்டில் நாட்டம் செலுத்துவதும், பொதுவாக ஏதேனும் பிரச்சினை என்றால் முதல்  ஆளாக இருப்பதும் அவனின் குணம். இருவரும் ஒரே ஊர் என்பதாலும், படிப்பை தவிர எல்லாவற்றிலும் முந்தி நிற்பதாலும் அவனோடு நெருங்கி  பழக ஆரம்பித்தாள். இவளுக்கு  அதுவே நாளடைவில்  காதலாக மாறியது ஒரு தருணத்தில் போட்டுடைத்தாள். அதை கேட்டவன் யோசிக்க தொடங்கினான்.
அவள் நிறத்தில் கருப்பு என்றாலும் வகிடெடுத்து  சீவி சிங்காரித்து ஒய்யார நடை நடந்தால் காண்பவர் கவரும்படி கலையாகவே இருப்பாள்.அவனுக்கு இவளை சக தோழியாக பிடிக்கும் என்றாலும் காதலிக்க தோணவில்லை. முனியன் , இவளுக்கு   பதிலுரைக்க எடுத்துக்கொண்ட இடைப்பட்ட நாட்களில்  நரகவேதனை அனுபவித்தாள். காதல் நமக்கு சரிப்படுமா, என்று யோசித்தவன் இறுதியில் ஒப்புகொண்டான். இவர்களுக்குள் வசந்தம் வீசிய காதல்  இருவரது வீடுகளிலும் தெரிந்து புயல் கிளம்பி எதிர்ப்பு வலுக்க இருவரும் ஒருமனதாக பேசி வெளியூர் சென்று  மனம் செய்துகொண்டு வாழ்வதென தீர்மானித்து புறப்பட்டுவிட்டார்கள். புறப்பட தீர்மானித்தவர்கள் எங்கே செல்வது என தெரியாமல் ஏதோ ஒரு பஸ்சில் ஏறி வந்து சேர்ந்த ஊர்தான் இப்பொழுது இவள் வசிக்கும் ஊர். குருட்டு தைரியத்தில் வந்து சேர்ந்த பின் எங்கே தங்குவது எப்படி வாழ்வது என்று வாழ்கையின் மீது பயம் வந்தது.யாரிடம் வீடு கேட்டாலும் தர மறுத்தார்கள் இவர்களின் இளம் தோற்றத்தை கண்டு. வேலை கேட்டாலும் இல்லை என்றார்கள் சிலர், சிலரோ படிப்பு இல்லை என்பதை  காரணம் காட்டினர். சரியான வேலையும் கிடைக்காமல், வீடும் கிடைக்காமல் திண்டாடி போனார்கள். என்னால்தான்  உனக்கும் இந்த நிலை என கூறி அழுதவளை தேற்றினான் முனியன்.
                      பகலில் எங்காவது இருந்தாலும் இரவில் தங்க இடம் வேண்டுமே என்பதை யோசித்து இரண்டொரு நாட்கள் அங்கும் இங்கும் தங்கி.  வந்துவிட்டபிறகு எப்படியும் வாழ்ந்துதான் தீரவேண்டும்  என்று மனதை திடபடுத்திகொண்டு அவளின் காதுகளில் இருந்த நகையை விற்று ஒரு சைக்கிள் ரிக்ஷா  வாங்கி பிழைக்க ஆரம்பித்தான்.  அதுவே பகலில் சவாரி இழுக்கவும் இரவில் அதிலேயே  தங்குவதும் நாளடைவில் பழகி போனது.  பிறகு  கொஞ்சம் காசு சேர்ந்த பின் அரசு இடத்தில் கூடாரம் அமைத்து வாழ துவங்கினார்கள் மன வாழ்க்கை வெகு சிறப்பாக உருண்டோடியது ரிக்ஷா இழுத்தாலும் பொன்னம்மாளுக்கு கஷ்டம் என்பதே தெரியாமல் வெகு சிறப்பாக பார்த்துகொண்டான் .
                காலம் சென்றதே தவிர இவர்களுக்கு பிள்ளைபேறு உண்டாகவில்லை, அதை நினைத்து கண் கலங்கிய நாட்கள் ஏராளம். உனக்கு நான் எனக்கு நீ என ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.   முனியன் ரிக்ஷா மீது ஏறிவிட்டால் ஒரு இடத்தில் நிற்கமாட்டான். சவாரி வரட்டுமென காத்து கொண்டிருக்கமாட்டான். தானே வலிய போய்  ரிக்ஷா வேண்டுமா என்று கேட்டு அழைத்து செல்வான். வீட்டில் இருந்து புறபட்டால் சவாரி பொழுது  போனால் வீடென கடிவாளம் கட்டிய குதிரை போல் இருந்தான். காலங்கள் உருண்டோடின இருவருக்கும்  மூப்பு எட்டிய காலம் முன்பு போல் இவனால் ரிக்ஷா ஒட்டமுடியவில்லை உடல் தளர்ந்து வலி உண்டாயிற்று.  நன்றாக படித்திருந்தாலாவது வேறு வேலை செய்து  பிழைத்திருக்கலாம். அதற்கும் வழிஇல்லை சிறுவயதில் செய்த தவறை எண்ணி  துணுக்குற்றான். பொன்னம்மாளை காக்க வேண்டும் என்பதால் வெளியில் சொல்லாமல்  ரிக்ஷா ஒட்டி வந்தான்.
                 அவளிடம் சொன்னால் என்னால்தான் உனக்கு இந்த நிலைஎன  கலங்குவாள் என்பதால் சக ரிக்ஷாகாரனான  சூரியிடம், டேய் மாப்ள முன்னபோல ரிக்ஷா இழுக்க முடிலடா ஒரே சோர்வா இருக்குடா என்று கூற. அதற்க்கு அவன் கவலைபடாத மாப்ள அருமையான மருந்து இருக்கு அந்தி சாஞ்சாப்புல இங்க வா  வாங்கித்தரேன் என்றான். செரிடா சூரி  நேரமாச்சு நாலு இடம் போனாதான்  நம்ம வண்டி ஓடும் நான் கிளம்பறேன்னு சொல்லிகொண்டே கிளம்பி போனான்.  அன்று முழுவதும் சவாரிக்காக சுற்றியதால் சூரி சொன்னதை மறந்தும் போனான். நேரம் செல்ல செல்ல கால் கடுக்க ஆரம்பித்தது. ஏதோ  மருந்து    இருப்பதாக சூரி சொன்னது ஞாபகம் வர அவனை தேடி  போனான்.
                        சூரியும் முனியனும் சேர்ந்து சற்று தொலைவில் உள்ள காட்டு பகுதிக்கு போய்க்கொண்டிருந்தார்கள்.  காட்டுக்குள்  மருந்து இருக்கும்போல இம்புட்டு நாள் நமக்கு தெரியாம போச்சே. இன்னக்கி அது எந்த மருந்து என்பதை தெரிந்துக்கொண்டு நாளை  நாமே வந்து கொண்டுபோகணும் தினம் சூரியை அழைப்பது அவனுக்கு தொந்தரவாக இருக்கும் என எண்ணியவாறே சென்ற முனியனிடம், டேய் மாப்ள  என்ற சூரியின்   குரல் முனியனின் மனவோட்டத்தை தடுத்து நிறுத்தியது. இதற்க்கு மேல் ரிக்ஷாவில் போகமுடியாது நிறுத்தி பூட்டிட்டு என்னோடு நடந்து வா என்ற படியே நடக்கலானான். ஊர் பகுதி முழுக்க முனியனுக்கு அத்துபடி என்றாலும்   இந்த இடம் புதிதாக இருந்தது.
                       ஆள் அரவமற்ற அடர்ந்த புதர்களுக்கும் மரங்களுக்கும் இடையே அங்கொன்றும் இன்கொன்றுமாக மனித தலைகள் தெரியவே அவர்களும் மருந்து கொண்டுபோக வந்திருப்பார்கள் போலும். டேய் யாருடா இவர்கள் எனும் முனியனின் கேள்விக்கு உன்னை போல மருந்து சாப்பிட வந்துருக்காங்கனு  சொன்னதும், இருந்துட்டு போகட்டும் நம்மை போல் உடல் வலி கொண்டவர்கள்தானே அவர்களும் மருந்து பறித்துக்கொண்டு போகட்டும், காட்டில்தான் நிறைய மருந்து இருக்குமே என்ற சிந்தனை மேலோங்க நடந்தான். பாதை குறுக குறுக கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது. கடா மீசையுடன் ஒருவன் வைத்த கண் வாங்காமல் இவர்களை பார்த்தபடியே இருந்தான். சூரியை பார்த்து யாருடா இது புதுசா என்றதும், அண்ணே மாரின்னே நீ பயப்படும் படி ஒண்ணுமில்லை அவன் என் தோழன்தானென பதிலுரைத்தான்.
                          கள் சாராயதிர்க்கு அப்போது தடை போட்டிருந்த காலமென்பதால் மாரி  பயந்தான். அருகே சென்றதும்தான் முனியன் அதை கவனித்தான். புதர் மறைவில் உள்ள கருப்பு கேன்களில் உள்ள ஏதோ ஒன்றை மாரி  ஊற்றி கொடுக்க அருகிருந்தவர்கள் வாங்கி குடித்துகொண்டிருந்தார்கள். முனியனுக்கு பொறி தட்டியது இவன் நம்மை குடிக்க அழைத்து வந்திருக்கிறான். இனிமேலும் இந்த இடத்தில் நாம் இருக்கக்கூடாதென  நினைத்தவன் திரும்பி நடக்கலானான். இதை கண்ட சூரி அவனை தடுத்தது மட்டுமில்லாமல் அவனுக்கு வலுகட்டாயமாக ஊற்றியும் விட்டான். முனியனுக்கு அந்த வாடை சுத்தமாக பிடிக்கவில்லை அவன் விழுங்க எத்தனித்த பொது குமட்டிக்கொண்டு வந்தது. சரக்கு உள்ளே சென்றதும் கிறுகிறுக்க ஆரம்பித்தது. வலி மெல்ல மறைய ஆரம்பித்தது, என்பதைவிட அவன் மூளை மழுங்க ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும்.
                       அந்த இடத்தை காலி செய்து கொண்டு புறப்பட்டான், அவனால் முன்பு போல் செயல்பட முடியவில்லை.   நேரமாகியும்  முனியனை காணாமல் தவித்த பொன்னம்மாள்   தூரத்தில் வரும்போதே அவனின் நடத்தையில் மாற்றம் இருப்பதை  கண்டவள், அருகே வரட்டும் என காத்திருந்தாள். அவன் ரிக்ஷாவை நிறுத்திவிட்டு இறங்குவதர்க்குள்  கால் இடறி விழுந்தான். இதை கண்டவள் பதறி போய்  தூக்கப்போனாள்  முனியன் பயந்தபடியே  விலகி செல்ல நினைத்தானே தவிர அவனால் முடியவில்லை. விழுந்ததில் அவன் கண் இருட்டி, குடலை பிரட்டிக்கொண்டு முழுவதுமாக  போன்னமாளின் மீதே முழுவதுமாக வாந்தி எடுத்தான். எந்நாளும் இல்லாத திருநாளாய் என்னய்யா  இது புது பழக்கம், என சுத்தம் செய்தபடியே  அவனை திட்டி தீர்த்தாள் . என்னை மன்னிச்சிடு பொண்ணு அந்த சூரிதான்  உடல்வலிக்கு மருந்து   தரேன்னு குடுத்துபுட்டான், இனி குடிக்க மாட்டேனென சத்தியம் செய்தான்.
                   பொன்னம்மாள் பிள்ளை இல்லை என்ற குறைக்கு அழுது தீர்த்தவள் இன்று வந்த புது பிரச்சினை எண்ணி அழுதபடியே தூங்கிபோனாள். முனியனும் உடல் சோர்வின்றி கண்   அயர்ந்தான். பொழுது புலர்ந்ததும் ரிக்ஷா எடுத்துகொண்டு புறப்பட்டான், இன்னக்கி  குடிச்சிட்டு வந்தால் வீட்டில் இடம் கிடையாது என்ற பொன்னம்மாளின் பேச்சை காதில் வாங்கியபடியே போனான். நேரம் செல்ல செல்ல முனியனின் பெருமூளையும் சிறுமூளையும் மாறி மாறி சிந்தித்து  அவனை பாடாய் படுத்தியது, இறுதியில் அவன் மனம் அவனை அறியாமல் காட்டு பகுதிக்கு அழைத்து சென்றது, இப்படியே ஒவ்வொரு நாளும்  குடிக்கமாட்டேன் என்று கூறுவதும் மறுநாள் குடித்துவிட்டு வருவதும் தொடர்ந்ததால் அவன் கல்லீரல்  கெட்டுப்போய்  சாப்பிட முடியாமல்  இருந்து உடல் உஷ்ணமாகி மஞ்சள்காமாலை வந்து குடல்  அழுகி மாண்டுபோனான்.
                       பொன்னமாளின் தலையில் பேரிடி விழுந்தது. பிள்ளை இல்லை என்ற குறையோடு இதுவும் சேர்ந்து கொள்ள இடிந்தே போனாள். இரண்டொரு நாட்களில் சோகம் குடிகொண்டிருந்தபோதும் கையில் வைத்திருந்த பணமும் கரைந்து போக, வாழ வழி இன்றி அன்று கூடையை தலையில் தூக்கி வைத்தவள்தான் இன்றும் அவளின் வாழ்க்கை போராட்டம் ஓய்ந்தபாடில்லை.










Sunday, April 29, 2012

நீதி கதை --- கூண்டுக்கிளி

நீதி கதை --- கூண்டுக்கிளி

ராஜாவிற்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியம்.
ராஜா பறவைகளின் மீது அதீத அக்கறை கொண்டு பல பறவைகளும், சிறு சிறு குருவிகளும்  வீட்டிலேயே வளர்த்து வந்தான்.அந்த பறவை இனங்களுள் ஒன்றுதான்  நம் கதையின் நாயகியான பெண்கிளி. அந்த கிளி கூறிய அழகுடனும், கோவை பழம் போல் செவ்வாயுடனும், மிகுந்த வனபுடனும்,பார்ப்பார்கள் மையல் கொள்ளும் அளவிற்கு அழகுடனும் இருந்தது.கிளியையும் மற்ற பறைவைகளை போல் கூண்டுக்குள் அடைத்து சுவையாக உணவிட்டு, சீக்கு வராமலிருக்க மருந்திட்டு போற்றி பாதுகாத்து வந்தான்.
         அக்கிளி மேலே பறந்து செல்லும் பறவைகளையும், தன சக இனமான கிளிகளையும் பார்த்து பல நாட்களாய் நாம் சுதந்திரமாக பறப்பது எப்போதென ஏக்கத்திலேயே இருந்தது.அந்த நேரத்தில் வான் வழியாக பறந்து சென்ற கூட்டு கிளிகளில் ஒரு ஆண்கிளி கூண்டு கிளியை நெருங்கி இப்படி அடைபட்டு இருகிறாயே, ஒரே உணவையே உன்கிறாயே, என்னுடன் வா சுதந்திரமாக பறக்கலாம், விதம் விதமாக உணவு உண்ணலாம்  என தந்திர வார்த்தை கூறியது.
ஏற்கனவே ஏக்கம் கொண்டிருந்த கூண்டுக்கிளி அந்த மந்திர வார்த்தைக்கு இணங்கியது. தனது எஜமானன் கண் அயர்ந்த வேளையில்  ஆண்கிளியின் துணை கொண்டு  கூண்டை விட்டு வெளியேறியது. பின் மிக சுதந்திரமாக வானில் உயர உயர  சிறகை விரித்து பறந்தது ஆபத்து இருப்பதை உணராமல்.

உயர உயர பரந்த கிளிக்கு வல்லுருகளாலும், கழுகுகளாலும்,பெரும் ஆபத்து வந்ததை கண்ட  ஆண்கிளி கூட்டு கிளிகளின் துணை கொண்டு கூண்டு கிளியை காப்பற்றியது.
வனப்புடன் இருந்த பெண்கிளி மீது அந்த ஆண்கிளி மையல் கொண்டது,
தனியாக காலம் கழித்த பெண்கிளி தனக்கு ஒரு ஜோடி கிளி வருவதை எண்ணி மிக சந்தோசம் அடைந்தது. சந்தோசம்  நிலைக்க வில்லை அங்குதான் பிரச்சினை  ஆரம்பித்தது. கூட்டு கிளியில் ஒன்றான அதன் ஜோடி கிளி அந்த ஆண் கிளியின் செய்கையை கூட்டு கிளிகளிடம் கூறி அகிளிகளின் துணைகொண்டு கூண்டுகிளியை கொத்தி துரத்தியது. காயம்பட்ட பெண்கிளி மதிகெட்டு மானம் மிழந்தோமே, நாம் கூண்டிற்கே சென்றுவிடலாம் என தீர்மானித்து திரும்பியது கூண்டிற்கு. தான் வாழ்த்த கூண்டில் வேறு ஒரு கிளி இருந்ததை கண்டு அதிருப்தி அடைந்தது.
தன் கூண்டிற்குள் நுழைய முயற்சி செய்தது அப்பென்கிளி. முயற்சிக்கும் நேரம் ராஜா அந்த பக்கம் வந்தான். ஏற்கனவே கூண்டில் இருந்த கிளியை கவர்ந்து சென்ற கிளிதான் வந்துள்ளதாய் தவறாக எண்ணி அக்கிளியை விரட்டி அடித்தான்.அந்த பெண்கிளி கூண்டுகிளியாகவும் வாழ முடியாமல், கூட்டு கிளிகளோடும் வாழ முடியாமல் பயங்கர விரக்தியுடன் தனிமை படுத்தபட்டது.




நீதி :  அவர் அவர் இடத்தில அவர் அவர் வாழ்வதே சிறப்பு..
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டால் தீங்கு வந்து சேரும்.